பாஜக-வை வீழ்த்த பரம எதிரிக்கு அழைப்பு விடுத்த மம்தா

958

பா.ஜ.கவை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போராட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொள்கை அளவில் கூட்டணி வைத்திருந்தாலும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் மம்தா பானர்ஜி கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக பல இடங்களில் தோற்றதும், பா.ஜ.க பல இடங்களில் வென்றது.

மேலும் தேர்தலுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து ஏராளமான கவுன்சிலர்கள் விலகி பா.ஜ.கவில் இணைந்தனர்.

இதனிடையே பல இடங்களில் இரு கட்சியினருக்கும் கடும் மோதலும் நிலவி வருகிறது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி அமைந்திருந்த நிலையிலும், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸின் பரம எதிரியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இருந்து வந்தது.

இந்தநிலையில், பா.ஜ.கவின் அசுர வளர்ச்சி மம்தாவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தநிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘இந்தியாவின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க மாற்றி அமைத்துவிடும் என்ற அச்சம் எனக்கு உள்ளது.

காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பா.ஜ.கவுக்கு எதிராக போராட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

வரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், மம்தா பானர்ஜியின் அழைப்புக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து தெரிவித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமென் மித்ரா, ‘சட்டமன்றத்தில் மம்தா பானர்ஜி பேசியதில் எந்த அர்த்தமும் இல்லை. அது அவருடைய சொந்த விருப்பத்தில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கை கோர்த்துள்ளோம் என்று பேசினார்.

அதன்பிறகு, எங்கள் கட்சியை லெட்டர் பேட் கட்சி என்று விமர்சனம் செய்தார். தற்போது, லெட்டர் பேட் கட்சியுடன் ஏன் கை கோர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்?’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஹன்னான் மொல்லா, ‘இந்த விஷயம் தொடர்பாக எதையும் சிந்திப்பதற்கு முன்னதாக, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மம்தா பானர்ஜி ஒரு சுயநலத் தலைவர். இதற்கு முன்னர் மேற்கு வங்கத்தில் ஏதேனும் ஒரு எதிர்கட்சித் தலைவருடன் அவர் பேசியுள்ளாரா? தற்போது, கையறுநிலையில் உள்ளதால் இவ்வாறு பேசியுள்ளார். இதுகுறித்து எதுவும் தெரிவிப்பதற்கு முன்னதாக, நாங்கள் பொறுமையாக யோசிக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தார்.

Advertisement