மோடியை போல் நான் விளம்பரம் செய்ய மாட்டேன்! மம்தா குற்றச்சாட்டு!!

255

ஹவுரா மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

“ரூ. 1,300 கோடி மதிப்பிலான 217 திட்டங்களை பல்வேறு இடங்களில் தொடங்கி வைத்திருக்கின்றேன். கழிவறையைக் கூட தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியைப் போல இருக்க நான் விரும்பவில்லை.

தினமும் ஆயிரம் திட்டங்களை திறந்து கொண்டிருக்கிறோம். இதற்காக அரசு பணத்தை செலவழித்து நாங்கள் விளம்பரம் செய்வதில்லை. அரசு பணத்தை சேமிக்கவும், விளம்பர செலவை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதுபோன்ற விளம்பரங்களை செய்ய வேண்டிய அவசியம் என்ன? மக்களுக்கு நல்ல பணியாற்றினால் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

யாராவது மோடிக்கு எதிராக பேசினால், அவர்களை பாகிஸ்தானியர் என்கின்றனர். இவர்கள் மட்டும்தான் இந்தியர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடக்கையை அறிவித்தபோது, அதனை முதலில் எதிர்த்த தலைவர் நான்தான். அந்த நடவடிக்கைக்குப் பின் இதுவரை 2 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர்.

1,200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மனிதாபிமானத்தைப் பற்றி அறிந்து கொள்ள பாஜக மறுக்கிறது. என் மதம் என்னவென்று தெரிந்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் கைகள் ரத்தம் படிந்தவை.

வன்முறை அவர்களுக்கு மட்டுமே தெரியும். அரசை கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். முன்னணி தொலைக்காட்சிகள் எல்லாம் பாஜகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை வெளியிடுகின்றன.

பெரும்பாலான டெல்லி தொலைக்காட்சிகள் விலை போய்விட்டன. மாநிலங்களில் உள்ள தொலைக்காட்சிகள் மட்டுமே குரல் கொடுக்கின்றன.

உண்மையையும் பொய்யையும் கலந்து கொடுக்கும் இவர்களுக்கு எவ்வளவு கோடி கொடுத்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

உண்மையை மறைக்க இப்படி தொலைக்காட்சிகளை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இவ்வளவு மிரண்டு போன பிரதமரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of