தடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்

312

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பட்டேல் தெருவில், துரை ராஜ் மற்றும் பாலுக்கரசு ஆகியோரின் வீடு அடுத்தடுத்து அமைந்துள்ளது. இவர்களின் வீடுகளுக்கு இடையே உள்ள தடுப்பு சுவர் தொடர்பாக, இருதரப்பினருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில், துரைராஜூக்கு ஆதரவாக நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, பாலுக்கரசு ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் துரைராஜ் மற்றும் அவரது மகன் கூடலிங்கத்தை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து, புகாரளிப்பதற்காக துரைராஜ் மற்றும் அவரது மகன் இருவரும் பரமக்குடி காவல் நிலையம் சென்றநிலையில், மகன் கூடலிங்கம் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜல்லி முருகன் என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கூடலிங்கத்திற்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.

Advertisement