எனக்கு விளையாடுன அனுபவம்.. எனக்குதான் தெரியும்..” – சஞ்சய் மஞ்சரேக்கரால் வெடித்த சர்ச்சை..!

6288

கொல்கத்தாவில் தனது முதல் பகலிரவு டெஸ்டில் வங்கதேசத்தை சந்தித்த இந்திய அணி, 3வது நாளில் தொடக்கத்திலேயே இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

அந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 152/6 என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் களமிறங்கிய வங்கதேச அணி, 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியின் முஷிபிகூர் ரஹீம் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளும் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 4வது இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் வரலாற்றில் தொடர்ந்து 4 இன்னிங்ஸ் வெற்றிபெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்தது.

இந்தப் போட்டியின்போது ஆங்கிலத்தில் வர்ணணை செய்துகொண்டிருந்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்ளே இடையிலான உரையாடல் வைரலாகி வருகிறது.

ஹர்ஷா போக்ளேவின் கருத்துக்கு முரண்பட்டு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கொல்கத்தா டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணியின் பந்துவீச்சில் திணறிய வங்கதேச பேட்ஸ்மேன்கள், தொடர்ச்சியாக ஹெல்மெட்டில் அடிவாங்கிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து வர்ணனையின்போது விவாதம் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்யவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுப் பேசிய ஹர்ஷா போக்ளே,“இந்தப் போட்டிக்கு பின்னர் ஆய்வு செய்யும்போது, பேட் செய்யும்போது பந்தை நன்றாகப் பார்க்க முடிந்ததா என்று வீரர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்” என்றார்.

அவருடன் வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் இந்தக் கருத்தை ஏற்க மறுத்தார். போக்ளேவுக்குப் பதிலளித்த மஞ்சரேக்கர், “நான் அப்படி நினைக்கவில்லை. அது ஒரு பிரச்னையாக இருக்கும் என்று கருதவில்லை” என்றதுடன் வெளியில் இருந்து பார்ப்பவர்களால்கூட இந்த முடிவுக்கு வர முடியும் என்றும் சொன்னார்.

ஆனால், இதுகுறித்து வீரர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டியது அவசியம் என்று போக்ளே மீண்டும் வலியுறுத்திய நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கர் அவருக்கு அளித்த பதில்தான் சர்ச்சையில் முடிந்திருக்கிறது.

அப்போது பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், “நீங்கள் கேட்கலாம். ஆனால், கிரிக்கெட் விளையாடிய எங்களைப் போன்றவர்களுக்குத்தான் அங்கு (களத்தில்) என்ன நடக்கிறது என்பது குறித்து தெளிவான ஐடியா இருக்கும்” என்று கூறினார்.

இதுதொடர்பான விவாதம் போய்க்கொண்டிருக்கும்போதே வங்கதேசத்தின் அல் அமீன் ஹூசைன் பவுண்டரி அடித்தார். அதைக் குறிப்பிட்டு இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளும் நோக்கில், பின்கள வீரர்களுக்குக் கூட பந்து நன்றாகத் தெரிகிறது என்று லேசான கிண்டல்தொனியில் மஞ்சரேக்கர் கமென்ட் அடித்தார்.

அடுத்த ஓவரின் தொடக்கத்தில், “கிரிக்கெட் விளையாடிய அனுபவம் மட்டுமே கற்றுக்கொள்வதற்கான வரம்பாக இருக்க முடியாது” என்று போக்ளே பதில்கொடுத்தார். இருந்தும் விடாத மஞ்சரேக்கர், “உங்கள் கருத்தைக் குறித்துக் கொள்கிறேன்.

ஆனால், ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறியிருந்தார். வர்ணனையாளர்கள் இருவரிடையே நடந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஹர்ஷா போக்ளே போன்ற அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வர்ணனையாளரிடம் சஞ்சய் மஞ்சரேக்கர் நடந்துகொண்ட விதம் தவறானது என நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of