மெரினாவில் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு

306

பொங்கல் பண்டிகையையொட்டி மெரினாவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

சென்னை: 17-ந் தேதி காணும் பொங்கல் அன்றைய தினம் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழிப்பார்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்படும்.

கடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையையொட்டியுள்ள பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி முழுவதையும் கண்காணிப்பதற்காக 6 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையம் கட்டப்படுகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.