ஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்..!

390

பொதுவாக திருமணங்கள் நல்ல நாள்,நல்ல நேரம் என ஆயிரம் சம்பிரதாயங்கள் பார்த்து நடத்தப்படுவது வழக்கம்.அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களின் இல்லத் திருமணங்கள் அந்த கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் நடப்பதுண்டு.

அந்த வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஒரு படி மேலே சென்று மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

தற்போது நினைவிடத்திற்கான கட்டிட பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் மட்டும் செல்ல அரசின் சார்பில் அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருப்பவர் பவானி சங்கர். இவர் தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதாவின் சமாதியில் நடத்த விருப்பப்பட்டார். இதற்காக முறையான அனுமதியை பெற்றிருந்தார்.

இதையடுத்து 11-09-19 காலை அவரது மகன் சாம்பசிவராமன் என்கிற மணமகனுக்கும் தீபா என்கிற மணமகளுக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திருமணம் நடைபெற்றது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தாலி எடுத்துக்கொடுக்க வேத மந்திரங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க மணமகன் தாலி கட்டினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் (எ) சின்னையா மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை 63-வது வட்ட அதிமுக பொருளாளரின் மகன் ஜெயதேவன் என்பவரின் திருமணம் நடைபெற்றது.தற்போது நடந்துள்ள திருமணம் ஜெயலலிதா சமாதியில் நடந்த இரண்டாவது திருமணமாகும்.