பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் கொலைகள் அதிகரித்துள்ளது – மதிமுக பொதுக்குழுவில் கண்டனம்

566

பாஜக ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மதிமுக பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு, (06.03.2019) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2014 மே மாதம், நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பா.ஜ.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்து, அநீதி இழைத்துள்ளது.

தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நதிநீர்ப் பங்கீட்டில், நமது மரபு உரிமைகளைப் பறிக்கும் வகையில் கர்நாடக மாநிலத்திற்குத் துணைபோனது; காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் வஞ்சித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவும், தமிழக மக்களின் கொந்தளிப்பும் ஏற்படுத்திய அழுத்தங்களால், பெயர் அளவில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தனர்.


மேலும் அந்த அறிக்கையில் பசுவதை எனும் பெயரால் சிறுபான்மை, தலித் மக்கள் மீது தாக்குதல்கள், படுகொலைகள்; பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை நியமித்தல்; கல்வித்துறையைக் காவிமயம் ஆக்குதல்;தேசத் தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்துவதும், அவரைக் கொலை செய்த கோட்சேவைக் கொண்டாடி மகிழ்வதும், சங்பரிவார் கூட்டத்தின் வன்மத்தைக் காட்டுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம், மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்ததுதான்.

அதே போன்று,ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதும், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்கத் துடிப்பதும், தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதும் தமிழக மக்களின் நெஞ்சில் பா.ஜ.க. அரசு மூட்டிய என்றும் தணியாத கனல் ஆகும்.

தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீது வன்மம் பாராட்டி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது இந்திய ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும்”என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது­.

மேலும்  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தல் 21 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of