வைகோவை கலாய்த்து மீம்ஸ் போட்டவர்களுக்கு போஸ்டர் மூலம் பதிலடி கொடுத்த மதிமுகவினர்

757
வைகோவின் தேர்தல் ராசியை மீம்ஸ் மூலம் விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் சுவரொட்டி மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.
 
 
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தியும் வெற்றி பெற்றார்.
 
 
தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 
இந்த நிலையில் வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெறாது என்றும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் வைகோ இடம் பெற்றிருந்த கூட்டணி தோல்வியடைந்ததால் அவரது அரசியல் ராசியை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களுடன் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டனர்.
வைகோவின் ராசி எப்புடி?- மீம்ஸ்களுக்கு மதிமுகவினர் பதிலடி
 
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பும் வைகோவை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன. இது ம.தி.மு.க.வினருக்கு மனவேதனை அளித்தது.
 
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த ம.தி.மு.க.வினர் ‘வைகோவின் ராசி எப்புடி?’ என்ற தலைப்பிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் வைகோவின் படத்துடன் கருணாநிதி, ஸ்டாலின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
 
தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
 
இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இது ஒருபுறம் இருந்தாலும், வைகோவும், ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த முறை வைகோவின் ராசி ராகுலை காவு வாங்கி விட்டது என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் மீண்டும் மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of