“ஜனநாயகத்தை நம்பி ஏற்றுக்கொண்டோம்.. இன்று ஏமாற்றப்பட்டுள்ளோம்..”- மெஹபூபா முப்தி வேதனை..!

1301

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த 370 சிறப்பு உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியாகும் முன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் பாதியிலே திரும்பிவர அறிவுறுத்தப்பட்டனர், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறுகையில், ” கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவை 2 தேசங்களாகப் பிரிக்கும் முடிவை ஜம்மு காஷ்மீரில் உள்ள தலைவர்கள் நிராகரித்தனர். ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவே விரும்பியது எதிராக வந்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைச் சட்டம் 370 பிரிவை இந்திய அரசு தன்னிச்சையாக நீக்கியுள்ளது சட்டவிரோதம், அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது.

இந்திய அரசின் இந்த முடிவு துணைக்கண்டத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்திய அரசின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களை அச்சுறுத்தலிலும், பதற்றத்திலும் வைக்கவே இந்திய அரசு விரும்புகிறது. காஷ்மீருக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.

இந்திய அரசின் நோக்கம் தெளிவாகிறது, கொடுமையானது. இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்தின் உருவத்தை மாற்றி, முஸ்லிம் மக்களின் அதிகாரத்தைக் குறைத்து சொந்த மாநிலத்திலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக வாழவேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.

ஏற்கெனவே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, யாரையும் சந்திக்க முடியாமல் இருக்கிறோம். எத்தனை நாட்களுக்கு இப்படி தொடர்பில்லாமல் இருக்க முடியும் என்பது உறுதியில்லை. இந்த இந்தியாவையா நாங்கள் ஏற்றுக்கொண்டோம்?

நாடாளுமன்றத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள எங்களைப் போன்றவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசசமைப்புச் சட்டத்தை நிராகரித்து, ஐ.நா.வின் தீர்மானத்தின்படி நடக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரில் சிலர் விடுத்த கோரிக்கை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை தனிமைப்படுத்தி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் “ எனப் பதிவிட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாட் நாயக் மத்திய அரசின் முடிவைப் புகழ்ந்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது துணிச்சலான வரலாற்று சிறப்பு மிக்க முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.