தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு – மண்டல வானிலை ஆய்வு மையம்

164

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின் திசை மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளான திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் தேவாலா பகுதியில் 7 செ.மீ மழையும், வால்பாறை, நீலகிரி பஜார், நடுவட்டம் ஆகிய இடங்களில் 6செ.மீ மழையும், கோதையர், சின்னகல்லாறு ஆகிய இடங்களில் 4செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மத்திய வங்க கடல் மற்றும் தென் வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு அப்பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.