எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று பிற்பகல் நடைபெற உள்ளது

1191

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது.

இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.MGR-100

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட உள்ளார். மேலும், எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றிய கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

மேலும், எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், மற்றும் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பையும் முதலமைச்சர் வெளியிட உள்ளார்.

மேலும் தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

முன்னதாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

கண்காட்சியில் 31 அரசுத்துறைகளின் சாதனை விளக்க அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement