திடிரென ராஜினாமா செய்த ஆளுநர்..,

124

கேரளாவைச் சேர்ந்த கும்மணம் ராஜசேகரன், கடந்த ஆண்டு மே மாதம் மிசோரம் ஆளுநராக பதவியேற்றார். ஆளுநர் பதவியில் சுமார் 10 மாதங்கள் நீடித்த நிலையில், இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வழங்கினார்.

ஆளுநர் கும்மணம் ராஜசேகரனின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அத்துடன், மிசோரம் மாநிலத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்கும் வரை, அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு, மிசோரம் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.கேரள மாநில பாஜக முன்னாள் தலைவரான கும்மணம் ராஜசேகரன், வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. தற்போது அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பதால், தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியில் கும்மணம் ராஜசேகரனை நிறுத்த மாநில பாஜக முழு ஆதரவையும் வழங்கும் என மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். இந்த தொகுதியில் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஜக நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் திவாகரன் களமிறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பி சசி தரூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.