சுஜித் நம் நினைவில் என்றும் நீங்கமாட்டான்.. – மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

731

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சுஜித், நிரந்தர சோகத்தைக் கொடுத்துவிட்டான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. சுஜித், உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ளபாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் நடக்க உள்ளது.

இந்நிலையில், ”நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ”சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.