ரஃபேல் விமான அரசியலால் இப்படி ஆகிவிட்டது – மோடி குற்றச்சாட்டு

483

ரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையை, தற்போது எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டிருப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ‘இந்தியா டூடே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் வசம் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன் மூன்று நாளில் விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என கூறினார்.

ரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையையும் தற்போது அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போதைய சூழலில் ரஃபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால், முடிவு வேறு மாதரியாக இருந்திருக்கும் என்றும், ரஃபேல் விமானத்தில் கட்சிகள் செய்த அரசியலால் தான் நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் பின்னால், உலக நாடுகள் ஓரணியில் திரண்டிருந்த நிலையில், இங்கிருக்கும் அரசியல் கட்சிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

முன்னதாக பயங்கரவாதிகள் 300 பேரை கொன்றதாக சொன்ன மத்திய அரசிடம் அதற்கு ஆதாரம் கேட்டிருந்தனர். இந்த தாக்குதல் அரசியல் இலாபத்திற்காக நடத்தப்படும் அப்பட்டமான நாடகம் என்றும், இராணுவ வீரர்களின் உயிரை பணயம் வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.

இதே போன்று ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement