வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் மோடி

368

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்த முறையும் மோடியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்காக பாஜகவினர் இரவு பகலாக தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரணாசியில் நேற்று மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் உள்ள காகாலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். 11.30 மணியளவில் வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்ள இருப்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.