மோடி ஜாக்கெட் விற்பனை வீழ்ச்சி – வியாபாரிகள் வேதனை

213

நாடு முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் அவர் சட்டையின் மேல் அணியும் ஆப்-ஜாக்கெட் உடையும் பிரபலமானது. அது மோடி ஜாக்கெட் என்ற பெயரும் பெற தொடங்கியது.

தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி ஜாக்கெட் விற்பனையும் கொடிகட்டி பறந்தது. ஆனால் சமீப காலமாக மோடி ஜாக்கெட்டின் விற்பனை மந்தமாகிவிட்டதாகவும், மக்களுக்கு அதன்மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த ஆயத்த ஆடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எனது கடையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35 மோடி ஜாக்கெட்டுகள் விற்பனை ஆனது. அதன்பின் விற்பனை எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது வாரத்திற்கு ஒன்றுதான் விற்பனையாகிறது” என்றார்.

மற்றொரு வியாபாரி தெரிவிக்கையில், “ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் மோடி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஜி.எஸ்.டியால் மோடி ஜாக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து ஆடைகள் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.