2047 -க்குள் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே தேர்தல் அறிக்கையின் நோக்கம் – பிரதமர் மோடி பேச்சு..

494

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே பா.ஜனதா தேர்தல் அறிக்கையின் நோக்கம் என பிரதமர் மோடி கூறினார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா தேர்தல் அறிக்கை டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. ‘சங்கல்ப் பத்ரா’ (தீர்மான ஆவணம்) என்ற பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களின் முன்னிலையில் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவின் தீர்மான ஆவணம் நாட்டுக்காக உறுதியான, கால வரையறை நிர்ணயிக்கப்பட்ட 75 இலக்குகளை கொண்டுள்ளது. இந்த இலக்குகள் அனைத்தும் 2022-ம் ஆண்டுக்குள் எட்டப்படும். இந்த தேர்தல் அறிக்கை பல அடுக்கு மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும்.

நாடு விடுதலை பெற்று 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இந்த தேர்தல் அறிக்கையின் நோக்கம் ஆகும். இந்தியாவை வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இது ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.

நாங்கள் நாட்டின் வறுமைக்கு எதிராக போராட விரும்புகிறோம். மாறாக குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு உள்ளே அமர்ந்து இருக்க விரும்பவில்லை. முதலில் நாங்கள் மக்களின் தேவையை நிறைவேற்றினோம். இனி அவர்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

இந்த தேர்தல் அறிக்கை 3 முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. அதாவது தேசியவாதமே எங்கள் உத்வேகம். உள்ளடக்கமே எங்கள் தத்துவம். நல்லாட்சியே எங்கள் தாரக மந்திரம் ஆகும். எங்கள் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளின் மையமாக சாதாரண மனிதனையே நாங்கள் வைத்திருக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசும்போது, ‘2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வெளிப்படையான, வலிமையான மற்றும் தீர்க்கமான அரசை பிரதமர் மோடி அளித்து உள்ளார். பயங்கரவாதிகளின் எல்லைக்கே சென்று துல்லிய தாக்குதல் மற்றும் வான் தாக்குதலை நடத்தி இருக்கிறோம்’ என்று கூறினார்.

பா.ஜனதாவின் தீர்மான ஆவணம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று கூறிய அமித்ஷா, நாட்டில் மீண்டும் வலிமையான அரசை அமைப்பதற்கு பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை, உண்மையில் வேரூன்றியது என்று புகழாரம் சூட்டிய அருண் ஜெட்லி, அது வெறும் குறுகிய மனநிலையில் தயாரிக்கப்படாமல் தேசிய பார்வையில் உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.

பயங்கரவாதத்தை அதன் வேரிலேயே அழிப்பது என்ற தங்களின் புதிய கொள்கை மற்றும் கோட்பாடுகள் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தை பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of