ராகுலை இதை வைத்து கிண்டல் செய்வதா? – மோடியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

583

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளை கிண்டல் செய்யும் விதமாக பிரதமர் மோடி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சமயங்களில் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் சர்ச்சையாக பேசி பிரச்சனையில் சிக்குவது உண்டு. பாஜகவினர் அடிக்கடி இப்படி சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் மோடி, பிரதமர் ஆன பின் அது போன்ற சர்ச்சையில் எதிலும் பேசி சிக்கிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி ஐஐடி காரக்பூரில் பேசிய விஷயம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி காரக்பூரில் மாணவர்கள் முன்னிலையில் நேற்று முதல்நாள் மோடி பேசினார்.

அந்த நிகழ்வில் கேள்வி கேட்ட மாணவி ஒருவர், நான் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். அவர்களால் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வேறு விஷயங்களில் மிக திறமையாக செயல்படுவார்கள். அவர்களுக்கு உதவும் திட்டம் ஒன்றில் ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன், என்று பேசினார்.

ஆனால் மோடி உடனே அந்த பெண்ணை வழிமறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக ”உங்கள் திட்டம் மூலம் 40-50 வயது கொண்ட சில குழந்தைகளும் பயன் பெற முடியுமா? எனக்கு அப்படி ஒருவரை தெரியும். அந்த குழந்தைக்கு சிகிச்சை இருக்கிறது என்று தெரிந்தால், அவரின் அம்மா மிகுந்த சந்தோசம் அடைவார்” என்று மோடி பேசினார்.

ராகுலை குழந்தை என்று கிண்டல் செய்வதற்காக மோடி இப்படி பேசி இருக்கிறார். இது தற்போது பெரிய விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. குழந்தைகளுக்கு இருக்கும் ஒரு பாதிப்பை, குறைபாட்டை இப்படி கிண்டல் செய்வது எந்த விதத்தில் சரியானது? இதை வைத்தா காமெடி சொல்வது? என்று பலரும் மோடியை விமர்சித்து வருகின்றனர்.

உலகம் முழுக்க டிஸ்லெக்ஸியா உள்ளவர்கள் நிறைய சாதனைகளை செய்து இருக்கிறார்கள் பீத்தோவன், ஐன்ஸ்டின், பிக்காஸோ, அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல் என பலர் இந்த பாதிப்புடன் சாதனை செய்துள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் பல நாடுகளில் இதை கற்றல் குறைபாடு கிடையாது என ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of