தேர்தல் தேதி அறிவிக்கும்பொழுதே டுவீட் போட்டு ஆதரவு கேட்ட பிரதமர்

348

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. அந்த அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா வெளியிட்ட சிறிது நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக டுவிட்டர் பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

எல்லோருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற அடிப்படையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உங்கள் ஆசியை நாடுகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக (காங்கிரஸ் ஆட்சியால்) செய்ய முடியாததை, நாங்கள் 5 ஆண்டுகளில் நிறைவேற்றி சாதித்து இருக்கிறோம். தற்போது ஒரு பலம் வாய்ந்த, வளமான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதற்கான தருணம் வந்திருக்கிறது.

இன்றைக்கு நாடு அதிவிரைவில் மிக வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடாக முடியும்; பயங்கரவாதத்துக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும். சாதனை வேகத்தில் வறுமையை ஒழிக்க முடியும். இந்தியாவை தூய்மை ஆக்க முடியும். ஊழலை ஒழித்துக்கட்ட முடியும். ஊழல்வாதிகளை தண்டிக்க முடியும். பரந்த வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதை இந்திய மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு காலத்தில், 130 கோடி இந்திய மக்களின் ஆசிகளோடு, இதற்கு முன்பு முடியாது என கருதப்பட்டதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது.

2019 தேர்தல் இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கை பற்றியது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயக திருவிழாவாக தேர்தல் நடக்க உள்ளது. 2019 தேர்தலை தங்கள் பங்களிப்பு மூலம் மக்கள் நிறைவானதாக ஆக்க வேண்டும். இந்த தேர்தலில் வரலாற்று சாதனை அளவாக நிறைய பேர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் தடவையாக வாக்களிக்க உள்ளவர்கள், சாதனை படைக்கிற வகையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷனுக்கு வாழ்த்துக்கள். பல்லாண்டு காலமாக தேர்தல்களுக்கு ஒழுங்கான ஏற்பாடுகளை செய்த தேர்தல் கமிஷனை எண்ணி இந்தியா பெருமைகொள்கிறது.

இவ்வாறு அந்தப் பதிவுகளில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of