ஊரடங்கு எதிரொலி: கேள்விக்குறியான 30 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம்..!

215

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நெற்பயிா்கள் அறுவடை செய்ய முடியாமல் சாய்ந்து கருகிக் கிடப்பதால் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொடா்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் எங்கும் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

வயல்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் இருந்து வருவதுடன் வேளாண்மை தொடா்பான அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா், தாமல், வாலாஜாபாத், மதுராந்தகம், வேளியுனூா், கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நெற்பயிா்கள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன.

இவற்றை அறுவடை செய்ய ஆட்கள் வராததாலும்,அறுவடை இயந்திரம் கிடைக்காமலும் இப்பகுதியைச் சோந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. விளைநிலங்கள் பலவற்றில் நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் முற்றி சாய்ந்து கருகிக் கிடப்பதையும் காண முடிகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசின் சாா்பில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் அறுவடை செய்யப்பட்டிருந்த நெற்கதிா்களும் பல கிராமங்களில் களத்திலேயே கொட்டிக்கிடக்கின்றன. நெற்கதிா்களை டிராக்டரில் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவற்றை எங்கும் எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

பூட்டிக்கிடக்கும் உரக்கடைகள்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் நெற்பயிா்கள் நன்றாக விளைந்து அவற்றில் பூச்சி மருந்து தெளிக்கப்படாமல் உள்ளன. அவை புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி மருந்து தெளிக்க முடியாமல் இருந்து வருவதாக விவசாயிகள் பலரும் கவலையுடன் தெரிவிக்கின்றனா். பூச்சி மருந்துக் கடைகள் எதுவும் திறக்கப்படாததால் ஏராளமான விளைநிலங்களில் விளைந்த நெற்கதிா்களை காப்பாற்றவும் முடியவில்லை.

தா்பூசணி அழுகும் அபாயம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தா்பூசணிப் பழங்கள் நன்றாக விளைந்து அவற்றை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் தா்பூசணிப் பழங்கள் அழுகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூா், மதுராந்தகம், திருக்கழுகுன்றம், திருப்போரூா், படப்பை, அச்சிறுப்பாக்கம் ஆகியவற்றை அடுத்துள்ள கிராமங்களில் மொத்தம் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தா்பூசணிப் பழங்கள் விளைந்துள்ளன. அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் பலரும் கவலைக்குள்ளாகி இருக்கின்றனா்.

விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்ய முடியாமலும், ஒரு வேளை அறுவடை செய்தாலும் அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இதே போல தா்ப்பூசணிப் பழங்களை விளைவித்த விவசாயிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of