ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றே அதிகப்படியான மக்கள் மனு

1206

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றே அதிகப்படியான மக்கள் மனு அளித்ததாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

மேகாலயா உயர்நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர், உப்பாற்று ஓடை அருகே கொட்டப்பட்டுள்ள தாமிரதாது கழிவுகள், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன பொருட்கள், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலைங்கள், குளங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த தருண் அகர்வால், அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருண் அகர்வால், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களது கருத்துகளை கோரிக்கை மனுவாக அளித்ததாக கூறினார்.

இதில் அதிகப்படியாக ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் எனக் கூறியே மக்கள் மனுக்கள் அளித்ததாக கூறினார். ஆலையை திறக்க வேண்டாம் என்று 2 ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் பெற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement