இறந்த தன் குட்டி யானையின் உடலை எடுக்க விடாமல், தாய் யானை பாசப் போராட்டம்

728

கர்நாடகாவில், இறந்த தன் குட்டி யானையின் உடலை எடுக்க விடாமல், 2 நாட்களாக தாய் யானை பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ளது கொத்தனூர் கிராமம். இந்த கிராமத்தில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும் நிலையில், கடந்த 26 ஆம் தேதி,12 காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை உணவாக்கி கொண்டிருந்தன.

அப்போது, யானை கூட்டத்தில் கருவுற்றிருந்த பெண் யானை ஒன்று, திடீரென்று ஒரு குட்டியை ஈன்றது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலே ஆன அந்த குட்டி யானை பரிதாபமாக இறந்தது.

இதனையடுத்து, தாய் யானை காட்டுக்குள் செல்லாமல், இறந்த குட்டி யானையை விட்டு பிரியாமல், தன் குழந்தையையே சுற்றி சுற்றி வந்தது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானை கூட்டத்தை விரட்ட பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களை வீசியும் விரட்ட முயன்றனர்.

ஆனால் குட்டியின் உடலை எடுக்கவிடாமல், தாய் யானை வனத்துறையினரை துரத்தியது. இதனைத் தொடர்ந்து, 2 நாள் போராட்டத்திற்கு பிறகு, இறந்த குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.

பிறந்தவுடன் இறந்த குட்டி யானையின் உடலை விட்டு பிரிய முடியாமல், தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் அங்கிருந்த மக்களை நெகிழ வைத்தது.

Advertisement