இறந்த மகளுக்கு 4 நாட்களாக பணிவிடை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய்

477
youtube

தூத்துக்குடியில், தனது மகள் இறந்துவிட்டது கூட தெரியாமல், பிணத்துக்கு பணிவிடை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், குமாரசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மாவதி. மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு கணேசன் என்ற மகனும், சபிதா என்ற மகளும் உள்ளனர்.

சபிதா கடந்த வருடம் கல்லூரி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், பத்மாவதி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்-பக்கத்தினர் முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், வீட்டில் சென்று பார்த்த போது, பத்மாவதியின் மகள் சபிதா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சபிதா கடந்த பல நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதியடைந்து வந்ததாகவும், இவர் இறந்து 4 நாட்கள் இருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட தாய், தன் மகள் இறந்தது கூட தெரியாமல் 4 நாட்களாக பிணத்துக்கு பணிவிடைகள் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.