காங்கிரஸில் இணையும் பாஜக எம்.பி ?

289

பாஜக எம்.பியும், பிரபல இந்தி நடிகருமான சத்ருகன் சின்கா கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்த பாஜக மேலிடம் முடிவு செய்தது.

இதையடுத்து, தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு அறிவிப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்து இருந்தார்.

தற்போது ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சத்ருகன் சின்கா அதிருப்தி அடைந்துள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அதன் தலைவர் ராகுல் காந்தியை சத்ருகன் சின்கா இன்று சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நவராத்திரி வரை பொறுத்திருங்கள். நல்ல முடிவை அறிவிக்க உள்ளேன் என தெரிவித்தார். அவர் ஏப்ரல் 6-ம் தேதி காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.