எம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..! சிறப்புத் தொகுப்பு..!

2082

கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி. வசந்தகுமார் இன்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 70. தற்போது அவர் கடந்து வந்த பாதை பற்றிய சிறுதொகுப்பை பார்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில், 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி பிறந்தவர் எச்.வசந்தகுமார். மிகப்பெரிய தொழிலதிபராக வர வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கனவுக்கொண்டிருந்த இவர், வி.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராக தனது பயணத்தை தொடங்கினார்.

எட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, அந்நிறுவனத்திலேயே மிகவும் முக்கியமான பதவியில் அமர்த்தப்பட்டார். பிறகு தனது நண்பனிடமிருந்த மளிகைக்கடை ஒன்றை வாடகைக்கு பெற்று, அதனை வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையாக உருவாக்கினார்.

கடின உழைப்பு என்றும் ஏமாற்றாது என்பதற்கு உதாரனமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகளை அமைத்து அனைவரையும் வியக்க வைத்தார்.

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், சிறு வயதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் மீது அவருக்கு பற்று இருந்தது. இதன்காரணமாக, காங்கிரசில் இணைந்த வசந்தகுமார், அக்கட்சியின் மூத்த தலைவராகவும் வலம் வந்தார். இதுவரை 2 முறை எம்.எல்.ஏ-வாகவும், 1 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நுரையீரலில் சளி அதிகமாகி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், நீரழிவு நோய் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணங்களாலும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுயநினைவு இழந்து, செயற்கை சுவாச கருவிகள் மூலம் சுவாசித்து வந்த நிலையில், இன்று மாலை 6.56மணிக்கு இயற்கை எய்தினார். இவரது உயிரிழப்பிற்கு, பலரும் தங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.