முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை

256

முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

துணை கண்காணிப்பு குழு இது தொடர்பாக முடிவெடுக்கலாம் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அணையின் நீர் மட்டத்தை139 அடியாக குறைக்க துணை கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

இதன் மூலம், தமிழகம் உச்சநீதிமன்றத்தில் போராடி பெற்ற 142 அடிவரையில் தண்ணீர் தேக்கலாம் என்ற உத்தரவு பொய்த்துப்போகும் சூழல் எழுந்தது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்தேக்கும் அளவிற்கு வலுவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாக 139 அடியாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of