லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறை தயார்

534

லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயாராகி உள்ளது. விஜய் மல்லையாவையும் அதே அறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த நிரவ் மோடி, நெருக்கடி மிக்க லண்டன் சிறையில் கம்பி எண்ணி வருகிறார். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்து விட்டது.

இந்த நிலையில் நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எந்த சிறையில் அடைக்கப்படுவார், அங்குள்ள வசதிகள் என்ன என்று லண்டன் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

நாடு கடத்தி கொண்டு வரப்படும் பட்சத்தில் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இந்த நிலையில் மராட்டிய அரசு நிரவ் மோடியை அடைப்பதற்காக ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்த உத்தரவாத கடிதம் ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மராட்டிய அரசின் உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள 12-ம் எண் செல்லில் 2 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறையில் 3 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். காலியாக உள்ள மற்றொரு அறை நிரவ் மோடிக்கு ஒதுக்கப்படும். நிரவ் மோடி அடைக்கப்படும் இதே அறையில் மற்றொரு குற்றவாளியான விஜய் மல்லையாவும் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.

20 அடிக்கு 15 அடி இடவசதி கொண்ட இந்த அறையில் 3 மின்விசிறிகள், 6 டியூப் லைட்டுகள் மற்றும் 2 ஜன்னல்கள் உள்ளன.

நிரவ் மோடி அறையில் 3 கைதிகளுக்கு மேல் அடைக்கப்படமாட்டார்கள் என உறுதி அளிக்கிறோம்.

மேலும் ஐரோப்பிய விதிமுறைகளின்படி சிறை அறையில் அவருக்கு 3 சதுர மீட்டர் தனிப்பட்ட இடம் வழங்கப்படும். அவருக்கு காட்டன் துணியால் ஆன தரைவிரிப்பு, படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை போன்றவை அனுமதிக்கப்படும்.

மேலும் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக குறிப்பிட்ட நேரம் அவர் சிறை அறையில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார். ஆனால் ஒருநாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த அனுமதி நீட்டிக்கப்படாது. மேலும் அறையில் போதுமான ஒளி, காற்றோட்ட வசதி மற்றும் தனிப்பட்ட உடைமைகளை சேமிக்கும் வசதி வழங்கப்படும்.

இதேபோல் தினமும் தூய்மையான குடிநீர், மருத்துவ வசதி, கழிவறை மற்றும் சலவை வசதிகளும் அளிக்கப்படும். இந்த அனைத்து வசதிகளும் எந்தவித பாகுபாடும் இன்றி வழங்கப்படுவதுடன், சிறை அறைக்கு உயர்தர பாதுகாப்பும் வழங்கப்படும்.

நன்கு பயிற்சி பெற்ற எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன்கொண்ட காவலர்கள் பாதுகாப்பிற்கு பணி அமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்ற மோசடி வழக்கில் நாடு கடத்தி கொண்டுவரப்படும் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை சிறையில் வழங்கப்படும் வசதிகள் குறித்து கடந்த ஆண்டு மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of