சுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்?

458

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் கட்டிடபணிகள் முழுமை பெறாமலும், அடிப்படை வசதியின்றியும் பயணிகள் தவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் நூறு ஆண்டை கடந்த பழமை வாய்ந்ததாகும். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று முடிந்து சமீபத்தில் காரைக்குடி-திருவாரூர் இடையே டெமு ரயில் இயங்கி வருகிறது.

விரைவில் இப்பகுதியில் பல்வேறு ரயில் சேவை தொடர உள்ளது. இந்தநிலையில் இங்கு ரயில் நிலையம் உருவாகி இருந்த காலத்திலிருந்து ‘பி” கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தற்பொழுது தரம் குறைத்து ‘டி” கிரேடாக தென்னக ரயில்வே துறை மாற்றி உள்ளது.

இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும் மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும்.

இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மற்றும் பயணிகளுக்கு எந்தவிதமான வசதிகள் பெறவும் வாய்ப்புகள் இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துப்பேட்டை பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் உயரதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்கவில்லை. தற்பொழுது இப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் டெமு ரயில் சேவைகளும் விரைவில் முடங்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க அகல ரயில் பாதை அமைக்கும் போது நெடுவெங்கும் ரயில் வழித்தடம் அருகேயிருந்த ரயில்வே ஸ்டேசன்களும் தற்போது புதுப்பிக்கப்பட்டு பயனுக்கு வந்துள்ளன.

இந்தநிலையில் இந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை ஸ்டேஷன் மாஸ்டருடன் இயங்கும் வகையிலும் கட்டிடத்துடன் பிளாட்பாரமும் அமைத்தும், ரயில் கிராசிங் அளவிற்கு இடத்தையும் அமைத்து என பல கோடி செலவழித்து பார்க்க மிளிர செய்த ரயில்வே நிர்வாகம், பல பணிகளை அப்படியே பாதியில் விட்டுள்ளது.

இதில் ரயில்நிலையம் முகப்பு கட்டிடம் முழுமை பெறாமல் விடப்பட்டுள்ளதால் கட்டிடம் பொலிவிழந்து வருகிறது. அதேபோல் ரயில்நிலையம் முன்பாக அமைக்கப்பட்ட ரவுண்டானா மற்றும் அதன் மேல் பகுதியில் அமைக்க இருந்த மினி பூங்கா பணியும் அப்படியே விடுபட்டுள்ளது.

அதேபோல் இங்கு வரும் பயணிகள் பயணப்படுத்தும் வகையில் எந்தவொரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் ரயில்நிலையம் இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது.

இதில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது. அதேபோல் ரயில் நிலையம் பக்கவாட்டில் சுற்றிலும் கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் போதிய தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால் பல இடங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு என்றைக்கு யார் தலையில் விழுமோ என்ற அச்சத்தில் உள்ளது.

ரயில் நிலையம் வளாகம் முழுமைக்கும் கருவை காடுகள் மண்டி கிடைகிறது. அதேபோல் சுற்றுபகுதியில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அசுத்தமாக மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியை ஏற்ப்படுத்தும் நிலையில் உள்ளது.

இதில் ரயில் பயணிகளை விட குடிமகன்கள் சமூக விரோதிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இந்த ரயில்நிலையம் உள்ளது. இரவில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருவதுடன் அதன் இருக்கைகளை அவர்கள் வசதிக்கு மாற்றி அமைத்து சுதந்திரமாக மது அருந்தி வருகின்றனர்.

அதனால் ஆங்காங்கே மது பாட்டில்கள் சிதறி கிடக்கிறது. ஆடு, மாடுகள், நாய்கள் உட்பட கால்நடைகளுக்கு தங்கும் இடமாகவும் உள்ளதால் பிளாட்பாரம் முழுவதும் அசுத்தமாக உள்ளது.

எனவே தெற்கு ரயில்வே முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அரைகுறையாக விடப்பட்ட பணிகளை முழுமையாக முடித்து அடிப்படை வசதிகளை செய்த தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கூறுகையில், முத்துப்பேட்டை ரயில் நிலையம் இப்பகுதி மக்களின் நீண்டநாள் நனவு நிலையம். ஆனால் இன்று பயன்பாட்டிற்கு வந்தும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லாமல் உள்ளது. இதில் எந்தவொரு அடிப்படை வசதிகளுக்கும் இல்லை.

ஆனால் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையம் போல் மின்னுகிறது. உடன் ரயில்வே துறை கவனத்தில் கொண்டு உடனடியாக ரயில் நிலையத்தை சுற்றிலும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு ரயில் பயணிகளுக்கும், இப்பகுதி மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of