மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..! – இந்து மக்கள் கட்சியினர் கைது..!

808

மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட இளைஞர் மீது கத்தி குத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தேடிவருகின்றார்.

பா.ஜ.க இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியத்தில் இருந்து இந்துத்துவ அமைப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த கால ஆட்சியின் போதே மாட்டுக்கறி உண்டதற்காகவும், மாடுகளை ஏற்றிச்சென்றதாகவும் வடமாநிலங்களில் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்தினார்கள். அதன் தொடர்ச்சி தற்போது தமிழகத்திலும் அத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளது.

நாகை அடுத்துள்ள பொரவச்சேரியைச் சேர்ந்த இளைஞர் முஹம்மது பைசான். இவர் நேற்றைய தினம் நண்பர்களுடன் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து, அவர் தமது முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் முஹம்மது பைசான் வீட்டிற்கு சென்று, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இதில் முஹம்மது பைசான் பலத்த காயமடைந்தார்.

பின்னர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் முஹம்மது பைசான் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பைசான் கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனையில் குவிந்தனர். இதனையடுத்து நடவடிக்கை எடுத்த காவல்துறை, பொரவாச்சேரி முகமது பைசானை தாக்கிய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த தினேஷ்,கணேஷ்குமார்,மோகன்குமார், அகத்தியன் ஆகியோர் 307 வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of