புதிய பிரதமராக இன்னும் சில வாரங்களில் ராகுல்காந்தி பொறுப்பேற்பார்!” -மு.க.ஸ்டாலின்

85

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இன்று பரப்புரையை தொடங்கியது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கூட்டணி கட்சிகளான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர்கழக தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக துணிச்சலுடன் அறிவித்த முதல் நபர் தாம் தான் என கூறினார். விதவிதமான தொப்பி, ஆடைகளை அணிந்து பிரதமர் மோடி மட்டுமே ஒளிர்கிறார் என விமர்சித்த ஸ்டாலின், நாடு ஒளிரவில்லை என வேதனை தெரிவித்தார்.

இந்து….ராம்…என்ற இரண்டு வார்த்தைகளை வைத்து பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த நிலையில், அவரது ஆட்சியில் ரஃபேல் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளர் ““இந்து ராமை“ கண்டு அஞ்சுவதாக கூறினார்.

கறுப்பு பணத்தை மீட்காமல், நாட்டின் நல்ல பணத்தை மோடி ஒழித்ததாக குற்றம்சாட்டிய ஸ்டாலின்  மோடி இரும்பு மனிதர் அல்ல என்றும், அவர் கல் மனம் படைத்தவர் என்றும் விமர்சனம் செய்தார். மோடியின் பினாமி ஆட்சியாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி உள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.