“டாஸ்மாக் கடை எங்க இருக்கு..” வழி சொன்ன நாம் தமிழர் கட்சி நிர்வாகி..! நொடியில் நேர்ந்த கொடூரம்..!

1144

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திருப்பைஞ்சீலி பகுதியில் நின்றுக்கொண்டிருந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பதுபோல் வந்த 2 பேர், கண்ணனை அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அவர்களிடம் இருந்து தப்பித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பின்னர் தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் பிரபு மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கண்ணனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்த தொடங்கினர்.

இந்த விசாரணையில், கடந்த 26-ம்தேதி திருப்பைஞ்சீலி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திரட்டப்பட்ட ஆவணங்களைக் கொண்டு கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியதுதான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Advertisement