கஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..!

1130

2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அன்று ஒரு கோரச்சம்பவம் நடைபெற்று, ஒட்டுமொத்த தமிழகமே உருகுலைந்துப்போனது. ஆம், அது சுனாமி தான். கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது.

ஏற்கனவே லாபம் இல்லாமை, கடன் உள்ளிட்ட பிரச்சனைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுனாமி நிலைமையை இன்னும் மோசமாக்கியது. விவசாயிகள் எலிக்கறியை உண்ணும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாகியிருந்தது. அப்போது தான் கடவுள் உருவாக வந்து நின்றார் நம்மாழ்வார்.

இனி விவசாயமே செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலங்களை பண்படுத்தினார். உப்பு பூத்த அந்த நிலத்தில் மெல்ல பச்சையம் மீண்டும் துளிர்விட தொடங்கியது. அவரது சொற்களுக்கு மதிப்பு கொடுக்க தவறியவர்கள், அந்த கனத்திலிருந்து அவரை தேட தொடங்கினார்கள். பலர் மெல்ல இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்பினார்கள். மரபு விதைகளை மீட்க புறப்பட்டார்கள்.

அப்படி சிறந்ததொரு வழிக்காட்டியாக திகழ்ந்த மனிதர் அவர். சுனாமியை காட்டிலும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்திய இயற்கை பேரிடர் என்றால், அது கஜா புயல் தான். இன்றளவும் அந்த சீற்றத்திலிருந்து பல விவசாயிகளால் மீண்டு வர முடியவில்லை.

இதுதொடர்பாக 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒற்றை நாற்று நடவு நெல் அறுவடை திருவிழாவில் நம்மாழ்வார் தீர்வுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், “இயற்கை விவசாயம் என்பது ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல. இயற்கையின் மொழி புரிந்து அதன் தன்மைக்கேற்றவாரு விவசாயம் செய்யுறதுதான். இயற்கை விவசாயம் செய்யுறேன்.

தென்னைக்கு பூச்சி விரட்டி எதுவும் அடிக்கிறது இல்லைங்குறான். இது எப்படி இயற்கை விவசாயம் ஆகும்? நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை. அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில விவசாயம் செய்யுங்க. அது நம்ம நிலத்துல காடு வளர்க்கிற மாதிரி.

அதாவது நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களில் அறுவடைக்கு வரும் மரங்களை நடுவது. தேக்கு, தென்னை, வாழை, பாக்கு என கலவையாக மரங்களை நடுவது. ஊடுபயிராக காய்கறிகளையோ, கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்வது.

இது பெரும் காற்றடிக்கும் போது ஒரு மரம் மற்றதற்கு அரணாக இருக்கும். சுழற்சியில் அறுவடைக்கு வருவதால், பொருளாதார ரீதியாகவும் நல்லது” என்று கூறினார்.

நம்மாழ்வார் கூறிய இந்த வழிமுறைகளை பின்பற்றியிருந்தால், கஜ புயல் தாக்குதலின் போது இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்பது நிதர்சனமான உண்மை. இத்தகைய பெரும் வழிகளை கூறிய அந்த மனிதருக்கு இன்று தான் நினைவுதினம்..,

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of