சின்னதம்பியின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்!- சென்னை உயர்நீதிமன்றம்!!

110
chinna-thambi

சின்னதம்பி யானையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சின்னத்தம்பி என்ற காட்டு யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாயிகளின் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர்.

இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், சின்னதம்பியை கும்கி யானையாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சின்னதம்பி யானையின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இயற்கை உணவுகளை கொடுத்து யானையை ஏன் காட்டுப்பகுதிக்குள் அனுப்பக் கூடாது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.