விடுதியில் தாயுடன் தங்கியிருந்த சிறுவன் மர்ம சாவு..!

568

திருநெல்வேலியில் தாயுடன் தங்கும் விடுதியில் இருந்த சிறுவன் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரகாசம், இவரது மனைவி தீபா, இவர்களின் மகன் யோகேஷ் (4). அதே பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பயின்று வந்தார். அந்தோணி பிரகாசம் கேரளத்தில் ஓட்டுனராகப் பணியாற்றி வந்த நிலையில், டாணாவில் தனது தாயுடன் யோகேஷ் தங்கியிருந்தார்.

கடந்த 20ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தீபா, அதே பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவருடன் அறை எடுத்து தங்கினாராம். அப்போது அவர்களுடன் யோகேஷும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கட்டிலிலிருந்து கீழே தவறி விழுந்து யோகேஷ் காயமடைந்ததாக கூறி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை சேர்த்தனர். அவரது உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வந்த யோகேஷ் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்தார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீபா மற்றும் சொரிமுத்து ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் அவருடன் பழகியவர் தாக்கியதால் யோகேஷ் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement