செவிலியர் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்..!

318

நெல்லை அருகே செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு, தங்க நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் இருவருக்கு தூக்குதண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டை வாசல் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வி அவரது வீட்டு மாடியில் கடந்த 2008 ஆண்டு செப்டம்பர் மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மேலும் பிரோவில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி போலீசார், 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். DNA சோதனையில் வசந்தகுமார் மற்றும் ராஜேஷ் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யபட்டது.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி இந்திராணி இன்று தீர்ப்பு வழங்கினார். ராஜேஷ், வசந்தகுமார் ஆகிய இரண்டு பேருக்கும் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் மற்ற 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement