தனது உலக சாதனையை தானே முறியடித்த நேபாள வீரர்.

696

நேபாளத்தின் சொளுகும்பு மாவட்டம் தாமே கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 50). பிரபல மலையேற்ற வீரரான இவர் இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8,848 மீட்டர்) இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார். கடந்த 15-ம் தேதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்நிலையில் இன்று மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் ஷெர்பா. இதன்மூலம் 24 முறை எவரெஸ்டில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

செவன் சமிட் டிரக்ஸ் என்ற நிறுவனத்தில் மலையேற்ற வழிகாட்டியாக பணியாற்றி வரும் காமி ரீட்டா ஷெர்பா இந்த முறை இந்தியாவைச் சேர்ந்த போலீஸ் குழுவிற்கு வழிகாட்டியாக எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றார். எவரெஸ்ட் உச்சியை வெற்றிகரமாக அடைந்த பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரமாக அடிவார முகாம்களுக்கு திரும்பினர்.

1994ம் ஆண்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரும் ஷெர்பா 1995ல் மலையேறவில்லை. அந்த ஆண்டில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்ததால் மலையேறும் முயற்சியை கைவிட்டார். ஆனால் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட அவர் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். குறைந்தது 25 முறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பதே இவரது விருப்பம்.

பழங்குடியின மக்களான ஷெர்பாக்கள் மலையேறுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால் மலையேற்ற வீரர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of