புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகத்தில் எதற்கு அனுமதி, எதற்கு அனுமதி இல்லை?

1243

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகள் இன்று பிற்பகலில் சீல் வைக்கப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகளும் மூடப்படுகிறது.

பெருந்தொற்று காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சாலைகள், பொது இடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்துள்ளனர்.

சுற்றுலா தலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடற்கரை பகுதிகளுக்கும் செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகள் இன்று பிற்பகலில் சீல் வைக்கப்பட உள்ளது. சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் இரவு 10 மணியுடன் மூடப்பட்டு, 300 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளது. உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சென்னை முழுவதும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று மாலை முதல் நாளை காலை வரை இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Advertisement