“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடு” – மத்திய அரசுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை..!

647

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட வலியுறுத்தி துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்திகா சிங் தனது ரத்தத்தில் கடிதம் எழுதி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ம் தேதி 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29-ம் தேதி அந்த மாணவி உயிரிழந்தார்

மாணவியைப் பலாத்காரம் செய்த ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நிர்பயா வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதில் அக்சய் குமார்சிங் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே நிர்பயா பலாத்காரத்தால் சிதைக்கப்பட்டு நாளையுடன் 7-வது ஆண்டு ஆகியபோதிலும் இன்னும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று நிர்பயாவின் தாயார் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிசுடும் வீராங்கனை வர்த்திகா சிங் தனது ரத்தத்தால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் 16-ம் தேதிக்கு முன்பாக தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி வலியுறுத்தியுள்ளார்.

வீராங்கனை வர்த்திகா சிங் நிருபர்களிடம் கூறுகையில், ” மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எனது ரத்தத்தால் எழுதிய கடிதம் இருக்கிறது. நிர்பயா வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதத்தில் எழுதி இருக்கிறேன். இந்தியாவில் பெண்கள் கடவுளுக்கு இணையாகப் பார்க்கப்பட வேண்டும் என்ற கருத்துரு உருவாக வேண்டும்.

இந்த செய்தி உலகம் அனைத்துக்கும் செல்ல வேண்டும். இந்தியாவில் ஒரு பெண்ணால் அவர்கள் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதைக் குற்றவாளிகள் அறியட்டும். என் கடித்ததை பதிவுத்தபாலில் அனுப்புகிறேன். டிவிட்டரிலும் கருத்து தெரிவித்துள்ளேன்.

என்னுடைய கருத்துக்கு ராணுவத்தில் உள்ள வீராங்கனைகள், பெண் ஊழியர்கள், அனைத்து பெண்களும் ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் நடக்கும் இந்த மாற்றம் சமூகத்தில் எதிரொலித்து புதியதொரு மாற்றத்தை உருவாக்கட்டும். அச்சமில்லாமல் வாழக்கூடிய சூழல் பெண்களுக்கு அவசியம் ” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணியை நிறைவேற்றுவதற்குத் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் ஸ்ரீனிவாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதேபோல மீரட் சிறையில் 3-வது தலைமுறையாகத் தூக்கிலிடும் பணியைச் செய்யும் பவான் ஜலாட்டும் விருப்பம் தெரிவித்துள்ளார்

Advertisement