எந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு!

610

பொது முடக்கம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வருடனான ஐந்தாவது ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து விளக்கினர்.

“இது புதிய வைரஸ். இது எப்படி செயல்படுகிறது என்பதை இன்னும் முழுவதுமாக கணடறியப்படவில்லை. உலகம் முழுவதும் இதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நகரங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 70 சதவீதம் பாதிப்பு 30 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலும் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இருப்பினும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்டோர்களை அதிகம் கண்டறிவதன் மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து விரைவில் வெளியேவர முடியும். பாதிப்பு அதிகரிப்பதற்கு ஏற்ப படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து நம் மக்கள் வர அனுமதியளிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது பரவாமல் தடுக்க மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும், கிருமி நாசினிகள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

“முக்கியமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதால் இங்கு பொது முடக்க நிபந்தனைகள் தொடரவேண்டும். இந்தப் பகுதிகளுக்கு தளர்வு அளிக்கப்படக் கூடாது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் அல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கலாம்” என்றும் மருத்துவக் குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனால் இதை ஒட்டியே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of