“பத்திரிக்கையாளர்கள் எனக்கெதிராக பேசவைப்பார்கள்” என மோடி சொன்னார்..! – பின்வாங்கிய நோபல் பரிசு பெற்ற அபிஜித்

336

நோபல் பரிசுப்பெற்ற அபிஜித் பானர்ஜி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி இந்தியாவின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார நிலை குறித்து அதிகமாக விமர்சித்தவர். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறிய அவரை பத்திரிக்கையாளர்கள் கூடி பல கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர் ‘பிரதமர் என்னை அழைத்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதுபோக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர், ‘பத்திரிக்கையாளர்கள் எனக்கு எதிராக உங்களை கருத்து கூற வைக்க முயற்சிப்பார்கள்’ என்று கிண்டலாக சொன்னார். தற்போது பிரதமரும் டிவியைதான் பார்த்து கொண்டிருப்பார். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்பது அனைத்தும் அவருக்கு தெரியும். அதனால் நான் உங்களுக்கு எதுவும் சொல்லப்போவதில்லை’ என கூறியுள்ளார்.