அணு ஆயுதங்களை கைவிடும் வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை..,

565

அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்வதை வடகொரியா நிறுத்தி வைத்தது.

எனினும் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் வகையில் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. அதேபோல், பொருளாதார நெருக்கடியில் தவிப்பதால் தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைக்கிறது.

இது குறித்து பேசி முடிவு எடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர்.

ஆனால், இந்த 2 நாள் சந்திப்பு, எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. வடகொரியா தங்கள் மீதான பொருளாதார தடை முழுவதையும் நீக்க வேண்டும் என கேட்டதை அமெரிக்கா ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் இதனை மறுத்த வடகொரியா, தாங்கள் பாதியளவு பொருளாதார தடைகளையே நீக்க கோரியதாக தெரிவித்தது. மேலும் இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறியது.

இந்த நிலையில், அணுஆயுதங்களை கைவிடாதவரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டின் நிறைவு விழாவில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of