குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

411

குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.குற்ற வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால்  முடித்து வைக்கப்பட்ட FIR-களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு  உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தலைமை பதிவாளர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 2 லட்சத்து15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி இது போன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைத்தது குறித்து  விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.

அதன்படி தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எம்.வி.முரளீரதன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of