சுபஸ்ரீ உயிரிழந்த இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவேளியில் மீண்டும் பேனர் விழுந்து விபத்து..!

921

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே பேனர் ஒன்றால் பலியாகி இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் கிட்டத்தட்ட அதே இடத்தில் இன்னொரு பேனர் விபத்து நடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றை அகற்றும் பணி நடைபெற்றது. 50 அடி உயரமுள்ள இந்த பேனரை ஒரு சில இளைஞர்கள் அகற்றி கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி அந்த பேனர் சரிந்து கீழே விழுந்தது.

இதில் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30 வயது ராஜேஷ் என்பவர் காயமடைந்தார். அவரது கை மற்றும் கால்களில் காயம் அடைந்ததை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்

சுபஸ்ரீ விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேனர்களால் இன்னும் எத்தனை விபத்துகள் நடக்க போகின்றதோ? என்று அதிர்ச்சியுடன் தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் பேனர் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் பல விபத்துக்கள் இதேபோல் நடைபெறும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்காததால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்