முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

283
suicide

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காதால், தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள்கள் மேனகா, கலைமகள் மற்றும் ரேவதி ஆகியோர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வின்ஸ்டார் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

மேலும் தங்களது உறவினர்கள், தோழிகள் என சுமார் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு வின்ஸ்ட்டார் நிறுவனம் மூடப்பட்டது.

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிண் பணம் மற்றும் அந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இந்த நிலையில், முதலீடு செய்த தொகையை தரமுடியாது என்று சிவக்குமார் கூறியதால், மனமுடைந்த சகோதரிகள் கடந்த மாதம் 12ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதையடுத்து மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ரேவதி உயிர் பிழைத்த நிலையில், கடந்த 28ஆம் தேதி மேனகா உயிரிழந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கலைமகள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.