திறந்தவெளி கழிப்பிடத்தால் திண்டாடும் மாணவிகள்

684

திருவண்ணாலை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் கழிப்பிடம் கட்டப்பட்டும் தண்ணீர் வராததால் மாணவ மாணவிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்….

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா படவேடு பஞ்சாயத்துக்கு உட்பட்டது இராமநாதபுரம் கிராமம்.  இந்த பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மார்ச் மாதம் திறந்தும்  வைக்கப்பட்டது.

இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம்  வகுப்பு வரை சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள  சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

புதிய வகுப்பறை, ஆய்வகம், நூலகம்,  கணினிஅறை என பல இருந்தாலும் இங்குள்ள கழிப்பறை என்னவோ  திறந்த நாள் முதல் தண்ணீர் இல்லாமல் தான் இருக்கிறது. இதனால் மாணவர்கள் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மாணவிகளுக்கு இது பெரும் பிரச்சனையாய் அமைந்துள்ளது..

மத்திய அரசும், தமிழக அரசும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்த கூடாது என்று மக்கள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசும், அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதே சாமனிய மக்களின் குரலாக உள்ளது…

கட்டப்பட்ட கழிப்பறைக்கு தண்ணீர் வராமல் இருப்பது அவல நிலையின் உச்சமாக உள்ளது.  மாணவ மாணவிகளின் நலன் கருதியும், சுற்றுபுறத்தின் தூய்மை கருதியும் விரைவில் மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர் என அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement