பிரதமர் மோடி வருகைக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு: திருப்பூரில் வைகோ தலைமையில் போராட்டம்

403

திருப்பூரில் இன்று நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது.

மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் உள்ளே புகுந்து உள்ளார். அவருக்கு எதிராகவும் தங்களது எதிர்ப்பினை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of