ப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும்..! புதிய மனு | P. Chidambaram | CBI

641

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, ப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கோரி சிபிஐ தரப்பில் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கக்கோரி, தொடரப்பட்ட வழக்குகளி்ன் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் புதிய பிரமாணபத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,வெளிநாடுகளில் உள்ள வங்கிக்கணக்குகள், சொத்துகள் குறித்து விசாரணை நடைபெற இருப்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

17 பினாமி வங்கிக்கணக்குகள் இருப்பதாகவும் அமலாக்கத்துறையின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஐந்துநாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுக்குமாறு ப.சிதம்பரம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே, சிபிஐ – ஆல் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின்மனு கோருவது தேவையற்றது என்று தெரிவித்த நீதிபதி பானுமதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனிடையே, ப.சிதம்பரத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி கோரி, சி.பி.ஐ. தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனிடையே, தவறான ஆதாரங்களை அமலாக்கத்துறை ஊடகங்களுக்கு கசிய விடுவதாக ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார். இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது.

அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளபடி, ஒரே ஒரு சொத்து சிதம்பரத்திற்கு இருப்பது நிரூபிக்கப்பட்டால், இந்த வழக்கையே வாபஸ்பெறுவதாக அமலாக்கத்துறைக்கு கபில் சிபல் சவால் விட்டார். வங்கிக்கணக்கைப்பற்றி விசாரிக்காமல் ட்விட்டர் கணக்கு பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதற்கு கபில்சிபல் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐந்துநாட்கள் சி.பி.ஐ.காவல் இன்றோடு நிறைவடைவதையொட்டி, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது, ஜாமின் வழங்கப்படுமா அல்லது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்படுவாரா, அல்லது சிபிஐ காவல் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவரும்.

Advertisement