சொத்து விவரங்களை 30-ந்தேதிக்குள் வெளியிடுங்கள் – இம்ரான்கான் வேண்டுகோள்

308

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். வழங்குவதாக கூறிய 600 கோடி டாலர் கடனும் பாகிஸ்தானுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நாட்டின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டை சிறப்பான நாடாக மாற்ற விரும்பினால் முதலில் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சொத்து கணக்கு வெளியிடும் திட்டத்தில் பங்கேற்கும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால் நாம் வரிகட்டவில்லை எனில் நமது நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல முடியாது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சொத்து கணக்கை வருகிற 30-ந்தேதி தேதிக்குள் வெளியிட வேண்டும்.

வங்கியில் வைத்துள்ள பணம் பினாமி பெயர்களில் உள்ள சொத்துகள், வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள பணம் என அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். ஜூன் 30-ந்தேதி தேதிக்கு பிறகு உங்களுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது.

அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். பினாமி பெயர்களில் சொத்துகள் பதுக்கி வைத்திருப்பவர்களின் விவரங்களை அரசு ஏற்கனவே திரட்டியுள்ளது.

பதுக்கி வைத்துள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவித்து அதற்குரிய வரியை செலுத்தி விட்டால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது சந்தியினரின் எதிர்காலத்துக்கும் நல்லது. மேலும் இந்த திட்டம் நம் நாடு சொந்த முயற்சியில் முன்னேறுவதற்கும், ஏழ்மையில் இருந்து மக்களை மீட்பதற்கும் உதவி செய்யும்.

என் அருமை பாகிஸ்தான் மக்களே கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியில் இருந்து ரூ.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

துரதிரு‌‌ஷ்டவசமாக பாகிஸ்தான் தான் உலகிலேயே குறைவாக வரி விதிக்கும் நாடாக உள்ளது. ஆனாலும் ஆண்டுதோறும் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு கூட வரி வசூல் ஆவதில்லை.

பிறகு எப்படி கடனை கட்ட முடியும்?. அன்றாட செலவுக்கே பணம் இல்லையென்றால் எப்படி அரசை வழிநடத்த முடியும்?. பணம் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டால் செலவு செய்வதற்கு அரசு பணத்துக்கு எங்கே போகும்?. இவ்வாறு இம்ரான்கான் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of