மருத்துவர்களுடன் வைரஸ் நோயாளிகள் கடும் வாக்குவாதம்

333

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக, வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறியதால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் மருத்துவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அரசு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை இல்லை என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வீட்டிக்கு செல்லுமாறு தெரிவித்தனர்.

இனி புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களும், வீட்டில்தான் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொற்றில் இருந்து குணமடையாமல் வீட்டிற்கு சென்றால், அக்கம் பக்கத்தினருடன், வீண் பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்தனர். ஆனால் அதற்கு தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளித்தனர்.

Advertisement