வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் கடுமையாக அவதி

349
vaniyambadi

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் செவிலியர்கள் செல்போன் வெளிச்சத்தில் நேயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை இருளில் மூழ்கியதால், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், உள் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மருத்துவமனையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும், மருத்துவமனை நிர்வாகம், அதனை இயக்காததால், ஒரு மணிநேரத்திற்கு மேலாக நேயாளிகள் இருளில் சிக்கித் தவித்தனர்.

நேயாளிகள் பலர் காற்று வசதி இல்லாமல், மருத்துவமனையை விட்டு வெளியே வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் மின்சாரம் இல்லாததால், செவிலியர்கள் செல்போன் வெளிச்சத்தில் நேயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டது.